இடஒதுக்கீடு எனும் இடவுரிமை | களம்
மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த தோழன் இயக்கம் பல்வேறு வகையில் முயன்று வருகிறது. “களம்” என்ற நிகழ்வின் மூலம் பல முக்கிய சமகால பிரச்னைகளில்,புரிதலை நோக்கிய விவாதங்கள் மற்றும் கருத்தரங்ககளை தோழன் ஒருங்கிணைத்து வருகிறது. மாநில சுயாட்சி, நதிநீர் இணைப்பு போன்ற கருத்தரங்களை தொடர்ந்து, இம்முறை இடஒதுக்கீடு தொடர்பான கருதரங்கத்தை பெரியார் திடலில்((அன்னை மணியம்மையார் அரங்கம்) ஒருங்கிணைக்கப்பட்டது. 18 நவம்பர் 2018, மாலை 4.30மணிக்கு தொடங்கிய நிகழ்வில் 150 பேர் கலந்துகொண்டனர்.

இடவொதுக்கீடு முறையினால் சமூகத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் குறைந்துவரும் நிலையில்,
சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆன பிறகும் இடவொதுக்கீடு வேண்டுமா என்ற சர்ச்சைக்குரிய கேள்வி விடையில்லாமல் நிற்கிறது. சாதிய கணக்கெடுப்பை வெளியிடாமல் மத்திய அரசும், பல மாநில அரசுகளும் பிடிவாதமாக இருக்கின்றனர். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடே சிறந்தது என்றும், சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை சாதிய வளர்க்கவே பயன்படுகிறது என்றும் தொடர்ந்து பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடஒதுக்கீடு பயனாளிகளின் மனதில்கூட திறமையற்றவர்கள் என்கிற தாழ்வு மனப்போக்கை இவ்வாறான பரப்புரைகள் விதைத்துவிடுகின்றன. எனவே, சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, உரிமை என்பதை உணர்த்தும் நோக்கில் ‘இடஒதுக்கீடு எனும் இடவுரிமை’ என்கிற தலைப்பில் இந்தக் கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருந்தனர்.

சமூக நீதி மற்றும் இடவொதுக்கீட்டின் முக்கியத்துவத்தை நிகழ்வின் கருத்தாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், மானமிகு முனைவர். தொல்.திருமாவளவன், இளைஞர் இயக்கத்தின் நிறுவனர், மானமிகு மருத்துவர். நா. எழிலன் மற்றும் பொருளாதார நிபுணர் மானமிகு ஜெயரஞ்சன்ஆகியோர் எடுத்துரைத்தனர். மருத்துவர். நா. எழிலன் தமிழகத்தில் நடந்த சமூக நீதிக்கான போராட்டத்தால் தான் இந்திய அரசியல் சாசனம் முதன்முதலாக திருத்தப்பட்டது போன்ற பல வரலாற்று விவரங்களை தரவுகளுடன் விளக்கினார். பொருளாதாரம் அடிப்படையிலான இடவொதுக்கீடு ஏன் தேவையில்லை என்பதை பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் பேசியது மக்களை சிந்திக்கவைத்தது. இறுதியாக பேசிய தொல்.திருமாவளவன், இடவொதுக்கீட்டால் இதுவரை ஏற்பட்ட பலன்கள், இடவொதுக்கீடு முறையில் ஏற்படுத்தப்படவேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் இடவொதுக்கீட்டின் தேவைகளை பற்றி ஆய்ந்து பேசினார். இடவொதுக்கீடு என்ற உரிமையின் அவசியத்தை அனைத்து கருத்தாளர்களும் மக்களின் ஆழ் மனதில் புகுத்தி புரிதலை நோக்கி நகர்த்தி சென்றனர்.
பல கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பிறக்க கூடிய சித்தாந்தங்களும் தத்துவங்களும் என்றுமே நிலைத்து நிற்கும். மக்களிடம் இருந்த சந்தேகங்களை தீர்த்து, இடவொதுக்கீடு பற்றிய தெளிவான பார்வையை இந்நிகழ்வு உறுதியாக ஏற்படுத்தி இருக்கும். இது போன்ற சமகால பிரச்சனைகளில் புரிதலை ஏற்படுத்த தோழன் தொடர்ந்து பாடுபடும்.