
சாம்சங் நிறுவனமும் அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து தொற்றா நோய்களுக்கு எதிராக போராட நடமாடும் மருத்துவமனையை அறிமுகம் செய்துள்ளன
- சமூகத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு தரமான சுகாதார, மருத்துவ சேவைகள் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமமும் இணைந்து, “சாம்சங் – அப்பல்லோ நடமாடும் மருத்துவமனை” என்ற பெயரில் புதிய சேவையை இன்று (ஜூலை 10) அறிமுகம் செய்துள்ளன. அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் (என்சிடி) தாக்கத்துக்கு எதிராக போராடி முன்னெச்சரிக்கை மருத்துவத்தை பின் தங்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உறுதி செய்ய ஏற்பாடு செய்துள்ளன.
சாம்சங் – அப்பல்லோ நடமாடும் மருத்துவ பராமரிப்புத் திட்டம், தமிழக ஆளுநர் திரு. பன்வாரி லால் புரோஹித்–தால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, அப்பல்லோ மருத்துமனைகள் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சங்கீதா ரெட்டி, சாம்சங் நிறுவனத்தின் சென்னை உற்பத்தித் தொழிற்சாலை மேலாண்மை இயக்குநர் ஜே யங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொற்றா நோய்களின் தாக்கத்தை துல்லியமாகக் கண்டறியும் வகையில் அதிநவீன தொழில் நுட்ப அம்சங்கள் சாம்சங் – அப்பல்லோ நடமடாடும் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளன. இந்த தொற்றா நோய்களின் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. தொற்றா நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய், மன அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்டவை இந்தியாவில் 50 சதவீத இறப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. இது போன்ற தொற்றா நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முன் கூட்டியே கண்டறிந்து அந்த நோய்களை வெல்வதே இந்த சாம்சங் அப்பல்லோ நடமாடும் மருத்துவமனையின் நோக்கமாகும்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக இந்த தொடக்க நிலை நோய் பரிசோதனை சேவை வழங்கப்படும். இந்த தொடக்க நிலை சோதனைகள் மற்றும் அதற்கான முகாம்களில் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த முன்முயற்சியைப் பாராட்டிப் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “சாம்சங் நிறுவனத்துக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டத்தக்கது. இவர்களின் இந்த முயற்சி இந்தியாவை ஆரோக்கியமானதாக மாற்ற உதவும். சாம்சங் நிறுவனமும் அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று தரமான முறையில் நோய்த் தடுப்பு மற்றும் முன் கூட்டியே நோய் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தரமான சேவைகள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்கின்றன. ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் சுகாதார சேவைகளின் தேவை அதிகரித்துள்ளது. அவற்றில் மேலும் கவனம் செலுத்தி மாற்றத்தை ஏற்படுத்தும் இந்தப் பயணத்தில் நானும் பங்கெடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, “இந்தியாவில் அனைவருக்கும் ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவது மிகப் பெரிய சவாலான விஷயமாக உள்ளது. குறிப்பாக தொற்றா நோய்களால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ரத்தநாள நோய்களால் உலகில் 1 கோடியே 70 லட்சம் பேர் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முன்கூட்டியே நோய் கண்டறிதலும் அவற்றைத் தடுத்தலும் தான் இவற்றுக்கு எல்லாம் தீர்வாக அமையும். ஆனால் மிகப் பெரிய நாடான நமது நாட்டில் ஒவ்வொருவரும் சரியான நேரத்திற்கு மருத்துவமனைகளுக்குச் செல்ல முடிவதில்லை. தூரம், நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அதற்கு காரணம். மருத்துவமனையை அணுக முடியாத இந்த நிலையை மாற்றி இந்த சவாலை எதிர்கொள்ள அப்பல்லோ மருத்துவமனை முடிவு செய்தது. சாம்சங் நிறுவனத்தின் உதவியுடன் சாம்சங் அப்பல்லோ நடமாடும் மருத்துவமனை தற்போது தொடங்கப்பட்டு தேவைப்படும் ஒவ்வொருவரையும் அணுகி அவர்களது மருத்துவத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தமிழ்நாட்டில் இதைத் தொடங்கியுள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் இதை விரைவில் விரிவுபடுத்தவுள்ளோம். தொற்றா நோய்களுக்கு எதிரான எங்களின் இந்த போராட்டம் பெரு நகரங்களில் மட்டும் இல்லாமல் இதரப்பகுதிகளுக்கும் சென்றடையும். மருத்துவமனைகளுக்குள் மட்டும் தான் சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பது இல்லை. அப்பல்லோ மருத்துவமனை ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அதன் மூலம் அனைவரும் நலமுடன் இருப்பதை உறுதி செ.ய்யும். ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குடிமக்கள் வளமான இந்தியாவை உருவாக்குவார்கள். அப்பல்லோ மருத்துவமனை இதற்காக தனது பங்குக்கு முடிந்த அனைத்தையும் செய்கிறது.” என்றார்.
சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன துணைத் தலைவர் பீட்டர் ரே பேசுகையில், “சாம்சங் அப்பல்லோ நடமாடும் மருத்துவமனைக்காக அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நடமாடும் மருத்துவமனை தமிழகத்தில் பின் தங்கிய கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்காக முகாம்களை நடத்தி தொற்றா நோய்கள் தடுப்பு தொடர்பான சேவைகள் மற்றும் இலவச மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்ளும். இந்த கூட்டு செயல்பாட்டின் மூலம் மாநில மக்களுக்கு தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை வழங்குவதில் உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்ய நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.